No icon

19, நவம்பர் 2023

ஆண்டின் பொதுக்காலம் 33 ஆம் ஞாயிறு (முதல் ஆண்டு) நீமொ 31:10-13,19-20,30-31, 1தெச 5:1-6, மத் 25:14-30

திருவழிபாட்டு ஆண்டின் இறுதியை நாம் நெருங்கியுள்ளோம். அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் திருநாள்! அதற்கு அடுத்த ஞாயிறு இடம்பெறும் திருவருகைக்கால முதல் ஞாயிறுடன், திருவழிபாட்டின் புதிய ஆண்டை ஆரம்பிக்கின்றோம். நாம் நிறைவு செய்யும் இந்தத் திருவழிபாட்டு ஆண்டு முழுவதும் ஞாயிறு திருப்பலிகளில், மத்தேயு நற்செய்தியின் வழியாக இறைவன் நமக்களித்த மேலான எண்ணங்களுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

2016-ஆம் ஆண்டு நாம் சிறப்பித்தஇரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில்வறியோர் உலக நாளைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கினார். அதன் அடிப்படையில், வருகின்ற நவம்பர் மாதம் 19-ஆம் நாள், அதாவது பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறு அன்று ஏழாம் முறையாகவறியோர் உலக தினம்கடைபிடிக்கப்படுகிறது. அதைக் குறித்துக் கடந்த ஜூன் மாதம் 13-ஆம் நாள் கொண்டாடப்பட்டஏழைகளின் பாதுகாவலர் புனித அந்தோணியார்திருநாளன்று, திருவிவிலியத்தின் தோபித்து நூலின் இறைவார்த்தைகளான, “ஏழை எவரிடமிருந்தும் உன் முகத்தைத் திருப்பிக்கொள்ளாதே” (4:7) என்ற வரிகளை மையப்படுத்தி, வறியோர் உலக நாளுக்குரியச் செய்தியைத் திருத்தந்தை வெளியிட்டுள்ளார்.

வறியோர் உலக நாளைக் கொண்டாடும் இன்று, கடவுள் நமக்குத் தந்துள்ள கொடைகள் அனைத்திற்கும் நாம் கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதையும், நம்மிடம் உள்ள மற்ற கொடைகளைப் பயன்படுத்தாமல் புதைத்து விடுகின்றோமா? என்ற கேள்வியையும் நம் மனத்தில் எழுப்புகிறது இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ளதாலந்து உவமை’.

17 இறைச் சொற்றொடர்களைக் கொண்டுள்ளதாலந்து உவமையைமூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் பகுதியில், தலைவர் தன் மூன்று பணியாளர்களிடம் தன் உடைமைகளை ஒப்படைத்ததையும், பொறுப்பைப் பெற்றவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதைக் கொண்டு என்ன செய்தனர் என்பதையும் (25:14-18); இரண்டாம் பகுதியில், திரும்பி வந்த தலைவர் கணக்குக் கேட்டதையும், பணியாளர்கள் இருவர் தாங்கள் ஆற்றியப் பணிகளின் கணக்கை ஒப்படைத்து, அதற்குரிய வெகுமதியைப் பெற்றனர் என்பதையும் (25:19-23); மூன்றாம் பகுதியில், இந்த உவமையின் நாயகனான மூன்றாவது பணியாளர், தனக்கு வழங்கப்பட்டதைக் கொண்டு எதுவும் செய்யாமல், அதை அப்படியே தலைவரிடம் திருப்பிக் கொடுத்ததையும், அதற்குரிய தண்டனையைப் பெற்றார் என்பதையும் சிந்திக்கலாம் (25:24-30).

முதலில் நம் கவனத்தை ஈர்க்கும் சொல்தாலந்து’. தாலந்து என்பது ஓர் எடை. அது அன்றைய காலத்தின் ஓர் அளவுமுறை. அதாவது, ஒரு தாலந்து என்பது 34.2 கிலோ கிராம் தங்கம் அல்லது வெள்ளியைக் குறித்தது. அது பிற்காலத்தில் பணத்தொகையாகக் கருதப்பட்டது. இயேசுவின் காலத்தில் ஒரு தாலந்து என்பது 6000 திராக்மா அல்லது தெனாரியம் விலை மதிப்புள்ளதாய் இருந்தது. ஒரு திராக்மா அல்லது தெனாரியம் என்பது, பொதுவாக ஒருவரின் ஒரு நாள் கூலியாகக் கருதப்பட்டது. வெள்ளியால் ஆனதாலந்துஎன்றால், 6000 நாள்களுக்கு, அதாவது, ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குரிய கூலித் தொகை. தங்கத்தால் ஆனதாலந்துஎன்றால், 1,80,000 நாள்களுக்கு, அதாவது, 600 ஆண்டுகளுக்குரிய கூலித் தொகை. இந்தப் புள்ளி விவரத்தைக் கொண்டு பார்க்கும் போது, ஒரு தாலந்தைப் பெற்றவர், 20 அல்லது 600 ஆண்டுகளுக்குரிய கூலித் தொகையையும், 2 தாலந்துகளைப் பெற்றவர், 40 அல்லது 1200 ஆண்டுகளுக்குரிய கூலித் தொகையையும், 5 தாலந்து பெற்றவர், 100 அல்லது 3000 ஆண்டுகளுக்குரிய கூலித் தொகையையும் பெற்றுக் கொண்டனர் என்று புரிந்து கொள்கிறோம். ஆகவே, ‘தாலந்துஎன்ற சொல்லுக்குத் திருவிவிலிய விரிவுரையாளர்கள் தரும் விளக்கங்களை வைத்துக் கணக்கிட்டால், இல்லத் தலைவர் தன் பணியாளர்களிடம் விட்டுச் சென்ற தொகை பெருமளவு என்பது புரிகிறது.

நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர், தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார்என்ற வார்த்தைகளுடன் துவங்கும் உவமையில் நாம் சந்திக்கும் தலைவர், தன் செல்வங்களைப் பணியாளர்களுக்குத் தந்தபோது, எவ்விதக் கட்டளையோ, ஆலோசனையோ கூறாமல் தன் உடைமைகளைப் பகிர்ந்தளிக்கிறார் (25:14). நிபந்தனை ஏதுமின்றி வழங்கும் இத்தலைவர், இறைவனை நம் கண்முன் கொணர்கிறார். இவ்வுலகம் என்ற கருவூலத்தை எவ்வித நிபந்தனையும் இன்றி, மிஞ்சிய தாராள மனத்துடன் இறைவன் நம் பொறுப்பில் ஒப்படைத்துள்ளார் என்ற உண்மையைத் தாலந்து உவமையின் முதல் வரிகள் நமக்கு நினைவுறுத்துகின்றன.

இந்த மூன்று பணியாளர்களுள் முதலிருவர், கொடுக்கப்பட்ட தாலந்துகளை இரு மடங்காகப் பெருக்கியதால் தங்களுக்கு உண்டான மகிழ்வைத் தலைவரோடு பகிர்ந்து கொள்கின்றனர். மூன்றாவதாக வந்த பணியாளரோ, தனக்கு அளிக்கப்பட்ட கொடையைப் பற்றிப் பேசாமல் அந்தக் கொடையைத் தந்தவரைப் பற்றிக் குறை கூறுகிறார் (25:24). நாமும் இறைவனிடமிருந்து பெற்றுள்ள பல கொடைகளை மறந்துவிட்டு அல்லது மறுத்துவிட்டு, எத்தனை முறை கடவுளைக் குறை கூறியிருப்போம் என்பதை எண்ணிப் பார்ப்போம்.

மூன்று பணியாளர்களின் செயல்பாடுகள், நாம் பெற்றுள்ள கொடைகளை நாம் பேணி வளர்க்கும் போது, நாம் கடவுளின் பாராட்டையும், மேலும் பல கொடைகளையும் பெறத் தகுதி உள்ளவர்களாகின்றோம். மாறாக, இக்கொடைகளைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால், நமக்கு இருக்கிற கொடைகளையும் நாம் இழக்க நேரிடலாம்; தண்டனையும் கிடைக்கலாம் என்பதை உணர்த்துகின்றது. அதே வேளையில், மூன்றாவது பணியாளருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பும், தீர்ப்பின் இறுதியில், “உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்; அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்” (மத் 25:29) என்ற தலைவரின் கூற்று நமக்கு அநீதியாகப் படலாம்.

தலைவரின் புதிரான இந்தச் சொற்களை எப்படிப் புரிந்துகொள்வது? சமூக நீதி என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், தலைவரின் சொற்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளாக ஒலிக்கின்றன. உள்ளவரிடமிருந்து செல்வங்களைப் பறித்து, இல்லாதோருக்குக் கொடுக்க வேண்டும் எனும் இக்கூற்று, உள்ளவர்-இல்லாதோருக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வை இன்னும் அதிகரிப்பதைப் போல் ஒலிக்கிறது. நற்செய்தியில் நாம் காணக்கூடிய கடினமான ஒரு பகுதி இதுவென்று சொன்னால் அது மிகையல்ல. எனவே, இச்சொற்களின் பொருளைச் சரியாக உணர்ந்து கொள்வது பயனளிக்கும்.

செல்வம் உள்ளவர்-இல்லாதோர் பற்றிய சமூக நீதிப் பாடங்களை நிலைநாட்ட இயேசு தாலந்து உவமையைச் சொல்லவில்லை. இயேசு சமூக நீதிக்கு எதிரானவர் அல்லர் என்பதும் நாம் அறிந்ததே. இங்குஉள்ளவர்என்று குறிப்பிடும்போது, வாழ்க்கையில் முன்னேற ஆர்வம் உள்ளவர்களைக் குறிக்கும். ‘இல்லாதோர்எந்த ஆர்வமுமின்றிச் சோம்பேறிகளாகக் காலத்தைக் கழிப்பவர்கள்பொறுப்புடன் செயல்படுவோருக்குக் கூடுதலாகப் பொறுப்புகள் வந்து சேர்வதும், பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்வோரிடமிருந்து அனைத்துப் பொறுப்புகளும் நீக்கப்படுவதும்தானே நம் சமூகத்தின் நடைமுறைப் பழக்கம்! “அக்கறை காட்டாதவரின் செல்வம் உண்மையிலேயே தடைகளைத் தாண்டி உழைப்பவருக்கே சேரும்என்று புகழ்பெற்ற கிரேக்கத் தத்துவ அறிஞர் டெமோஸ்தனஸ் கூறியது இப்போது நினைவுக்கு வருகின்றது.

இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது, உவமையின் இறுதி வரிகள் சொல்லித் தரும் விளக்கம்: தங்களுக்கு வழங்கப்படும் கொடைகளில் கவனம் செலுத்தி, அவற்றில் மகிழ்வும், நிறைவும் அடைந்து, செயல்படுவோருக்குக் கூடுதலான பொறுப்புகள் வந்து சேரும். இதைத்தான்உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர்என்ற இந்த வார்த்தைகள் சொல்வதாகப் புரிந்துகொள்ளலாம்.

இதே கண்ணோட்டத்தில் நம்பிக்கைக்குரிய நல்ல மனையாள் (சிறந்த மனைவி) யார் என்பதை நீதிமொழிகள் நூலில் வரும் இறுதிப்பாடல் (31) உணர்த்துகின்றது. தன் கடமைகளைச் செய்து துணிவோடும், திறனோடும் பெற்றுக்கொண்ட செல்வத்தைக் காத்து, கணவருக்கும்பிள்ளைகளுக்கும் நன்மை செய்பவரே நல்ல மனையாள். இவர் தன் கணவரின் செல்வத்தையும், அவர் தன்னிடம் வைத்த நம்பிக்கையையும் மதிக்கிறார். கணவரும் தன் மனைவியை நம்பி இன்னும் அதிகப் பொறுப்பைக் கொடுப்பார். நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரைத் தலைவர் பாராட்டியதுபோல, குடும்பத்தைத் தங்கள் அன்பாலும், தியாகத்தாலும் கட்டி எழுப்பி, மறைவான சேவை செய்யும் மனைவியரை எல்லாக் கணவர்களும் பாராட்டவும், அவர்கள் மட்டில் நன்றியுடன் இருக்கவும் தூண்டுகிறது இன்றைய முதல் வாசகம்.

இறுதியாக, “உன்னுடையதாலந்துஇறைவன் உனக்குத் தரும் பரிசு. அதைக் கொண்டு நீ என்ன செய்கிறாய் என்பது, நீ இறைவனுக்குத் தரும் பரிசு” (Your talent is God's gift to you. What you do with it is your gift back to God)) என்ற புகழ்பெற்ற அமெரிக்கப் பேராசிரியர் Leo Buscaglia (Dr. Love) அவர்களின் கூற்று இன்று நாம் கொண்டாடுகின்ற வறியோர் உலக நாளில் நினைவுகூரத்தக்கதாக அமைகிறது.

நாம் ஓர் ஏழையின் முன் நிற்கும்போது நமது முகத்தை, பார்வையை வேறு பக்கம் திருப்ப இயலாது. அவ்வாறு செய்தால் கடவுளாம் இயேசுவின் முகத்தைப் பார்ப்பதை நாம் தவிர்க்கின்றோம்என்ற திருத்தந்தையின் வார்த்தைகளை உள்வாங்கி, ‘இறைவனின் இரக்கத்தின் பலன் தரும் அடையாளமாக ஏழைகள் உள்ளார்கள்என்பதை இதயத்தில் ஏற்போம்.

இந்த வறியோர் உலக நாளில்,

* நம் வீட்டின் வாசலில் விழுந்து கிடக்கும் ஏழை இலாசர்களைச் சற்றே அடையாளம் காண்போம். “வறியோரே திரு அவையின் சொத்து, கருவூலம், எல்லாம்என்று 3-ஆம் நூற்றாண்டில் முழக்கமிட்ட புனித இலாரன்சின் கூற்றை மீண்டும் நினைவு கூர்வோம்.

* ஒவ்வொரு நாளும் எத்தனையோ நீட்டப்பட்ட கரங்களை நாம் காண்கிறோம். நீட்டப்பட்ட கரங்கள் அன்பின் அடையாளங்கள். இக்கரங்கள் ஆறுதலையும், ஆதரவையும் தேடுகின்றன என்பதை உணர்வோம். ‘அன்புஎனும் தாலந்தைப் புதைத்து விடாமல், பலருக்கும் பல மடங்காகப் பயன் தரும் வகையில்அடுத்திருப்பவரை’ (லூக் 10:29) நோக்கி நம் கரங்களை நீட்டுவோம் (சீரா 7:32).

* உண்மையிலேயே நாம் கிறிஸ்துவைச் சந்திக்க வேண்டுமெனில், அவரது உடைபட்ட உடலைத் தொட வேண்டும். நமது திருவழிபாட்டில் உடைக்கப்படும் கிறிஸ்துவின் உடலை, நலிவுற்ற நம் சகோதர, சகோதரிகளின் முகங்களில் காண முடியும்.

  “கிறிஸ்துவின் உடலுக்கு மதிப்பு செலுத்த விழைந்தால், அது ஆடையின்றிக் கிடக்கும் போது, அலட்சியப்படுத்தக்கூடாது. நற்கருணையில் உள்ள கிறிஸ்துவைப் பட்டுத் துணிகளால் மூடி, மரியாதை செலுத்திவிட்டு, குளிரில் ஆடையின்றிக் கிடக்கும் மறு கிறிஸ்துவைப் புறக்கணியாதே” - புனித ஜான் கிறிஸ்சொஸ்தம்.

Comment